Friday, December 17, 2010

வாசிக்கும் நாடாகட்டும் இந்தியா!

“நல்ல நண்பர்கள், நல்ல புத்தங்கள், அமைதியான மனம் இவைதான் உன்னதமான வாழ்க்கை” என்று வாழ்க்கையின் தத்துவத்தை சாறுபிழிந்து தருகிறார் மகத்தான எழுத்தாளர் மார்க் ட்வெயின். நல்ல நண்பர்களைப் போலவே, இடர்மிகுந்த தருணங்களில் நமக்குத் தோள்கொடுத்து நிற்பவை நல்ல புத்தகங்கள். புத்தகங்கள் அறிவுப் புதையல்கள், புத்தகங்கள் நம்பிக்கை மாளிகையின் கதவுகள். புத்தகங்கள் நம்மை சாதிக்கத் தூண்டும் கிரியா ஊக்கிகள். புத்தகங்கள் இல்லாத வாழ்க்கையை என்னால் வாழவே இயலாது என்று கூறி, புத்தகவாசிப்பை வாழ்க்கைமுறையாகவே பிரகடனப் படுத்தியுள்ளான் பேரறிஞன் தாமஸ் ஜெஃஅபர்சன்.

வரலாற்றை மாற்றிய புத்தகங்கள்

மனிதகுல நாகரிகத்தை முன்னெடுத்துச் சென்றிருப்பதில் மகத்தான பாத்திரம் புத்தகங்களுக்கு ஊண்டு. காட்டுமிராண்டிகளின் கூடாரமாக காட்சி அளித்த சீனாவில் அறிவுப்புரட்சிக்கு வித்திட்டவை, 2000 ஆண்டுகளுக்கு முன் கன்ஃபியூசியஸ் எழுதிய புத்தகங்களும், அவர் நடத்திய விடாப்பிடியான விழிப்புணர்வு இயக்கமும். 13 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மார்க்கோ போலோ எழுதிய பயணங்கள் என்ற மகத்தான புத்தகம், திரைகடல் ஓடி திரவியம் தேடும் வேட்கையை உலகெங்கும் உருவாக்கியது. அந்தப் புத்தகத்தால் ஈர்க்கப்பட்டு, நகைகளும் வாசனைத் திரவியங்களும் மிகுந்த இந்தியாவைத் தேடிப் பயணம் புறப்பட்ட கிறிஸ்டோபர் கொலம்பஸ் புதிய உலகமான அமெரிக்காவைக் கண்டுபிடித்தார். அவர் கண்டுபிடித்த அமெரிக்கா வரலாற்றின் தலைவிதியை நிர்ணயிக்கும் நாடாக மாறிவிட்டது. சாக்ரடீஸ், பிளேட்டோ, அரிஸ்டாட்டில் போன்ற பண்டைக்கால கிரேக்க தத்துவாசிரியர்களின் நூல்களையும், சிஸரோ, செனீக்கா போன்ற பண்டைக்கால லத்தீன் எழுத்தாளர்களின் நூல்களையும், தேடித்தேடிப் படிக்கும் தீவிர ஆர்வம் 14 ஆம் நூற்றாண்டின்போது ஐரோப்பாவில் ஏற்பட்டது. இந்த ஆர்வத்தின் விளைவுதான் ஐரோப்பிய மறுமலர்ச்சி இயக்கமும், அதன் தொடர்ச்சியாக உருவான தொழில் புரட்சியும். இந்திய விடுதலைப் போராட்டத்தின் உந்துசக்தியாக விளங்கிய காந்தியடிகள் தனது வாழ்க்கையையே திருப்பிப்போட்ட புத்தகம் என்று ஜான் ரஸ்கின் எழுதிய “அன்ட்டூ திஸ் லாஸ்ட்” புத்தகத்தைக் குறிப்பிடுகிறார். “ரஸ்கினின் அந்தப் புத்தகத்தை ஒரு பயணத்தின்போது வாசித்த நான், அதன் தாக்கத்தால் அன்று இரவு முழவதும் தூங்கவில்லை. கடைசி மனிதனும் சிறந்த வாய்ப்புக்களைப் பெற வேண்டும் என்ற உயர்ந்த கோட்பாட்டுக்கு ஏற்ப எனது வாழ்க்கையை மாற்றி அமைத்துக்கொள்ள வேண்டும் என்று அப்போதே நான் உறுதிசெய்துவிட்டேன்” என்று அந்த நூல் தனக்குள் ஏற்படுத்திய பாதிப்பு குறித்து பின்னாட்களில் விளக்கினார் காந்தியடிகள். இப்படி உலகின் எல்லாப் பகுதிகளிலும் வரலாற்றின் திசைப்போக்கை நிர்ணயித்திருப்பதும், வரலாற்று நாயகர்களின் வாழ்க்கைவழியை நிர்ணயித்திருப்பதும் புத்தகங்கள்தாம்.

தேர்வு செய்யுங்கள்


நல்ல நண்பர்களைத் தேர்வு செய்வதில் கவனமாக இருப்பதுபோலவே, நல்ல புத்தகங்களைத் தேர்வு செய்வதிலும் நாம் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். உங்கள் வாழ்க்கையைப் பயனுள்ளதாக்க எந்த நூல்கள் உதவும்? உங்களுக்குப் பிடித்த துறையில் சிகரங்களைத் தொட எந்த நூல்கள் உதவும்? உங்கள் குழந்தைகளின் சிந்தனையைச் செதுக்க எந்த நூல்கள் உதவும் என்பதுபோன்ற கேள்விகளுடன் தேடினால் மிகச்சிறந்த அறிவுப் புதையல்கள் உங்கள் கையில் கிடைக்கும்.

நேரம் ஒதுக்குங்கள்


நவீன நிர்வாகக் கலையின் தலைமை குருவாக வர்ணிக்கப் படுபவர் பீட்டர் டிரக்கர், 96 ஆண்டுகள் வாழ்ந்த அவர், தனது 92 வயதுவரை எம்.பி.ஏ மாணவர்களுக்கு வகுப்பு எடுக்கும் பேராசிரியர் பணியில் இருந்தார். இன்றைக்கும் அதிக அளவில் விற்பனையாகிவரும் 39 புத்தகங்களை எழுதியவர் அவர், பல்வேறு நாடுகளின் வெவ்வேறு பல்கலைக்கழகங்கள் அவருக்கு 25 கவுரவ டாக்டர் பட்டங்களை வழங்கின, இத்தனை ஆற்றல் மிக்க அந்த மேதை, தனது வெற்றியின் ரகசியமாகக் குறிப்பிட்டது புத்தகங்கள் வாசிக்கும் பழக்கத்தைத்தான். “ஓவ்வொரு ஆண்டும் ஒரு புதிய தலைப்பைத் தேர்வு செய்துகொள்வேன். அது தொடர்பான நூல்களை வாங்கிக்குவிப்பேன். அவற்றை முக்கியத்துவ அடிப்படையில் வரிசைப்படுத்தி, தினம்தோறும் குறைந்தது 4 மணி நேரம் வாசிப்பேன்.” அதாவது ஆண்டுக்கு 1500 மணிநேரம் வாசிப்பு. இத்தனை விரிவான வாசிப்பு இருந்தால், ஒரு சராசரி மனிதனும்கூட மேதை ஆகிவிடமுடியும் என்பதுதான் உண்மை.

வாசிப்பு உத்திகளைக் கையாளுங்கள்


உலகெங்கும் தலைசிறந்த மாணவர்களிடையே பிரபலமாகிவரும் PQRST( Preview Questioning. Reading, Self-recital, Test) என்ற படிப்பு உத்தியை, புத்தகங்கள் வாசிக்க நாம் பயன்படுத்திக்கொள்ளலாம்.

1. ஒட்டுமொத்தப் பார்வை: எடுத்தவுடன் புத்தகத்தின் வரிகளில் ஆழ்ந்துவிட வேண்டாம். புத்தகத்தைப் புரட்டிப்பார்த்து, அதைப்பற்றிய ஓர் ஒட்டுமொத்தப் பார்வையை உருவாக்கிக்கொள்ள வேண்டும். தலைப்பு, ஆசிரியர், முன்னுரை, உபதலைப்புகள், படங்கள், பின் அட்டை எனப் புத்தகத்தைப் பற்றிய பொதுவான புரிதலை உருவாக்கிக் கொள்வதுதான் வாசிப்பின் முதல் படி.


2. கேள்விகளை ஊருவாக்குதல்: புத்தகத்தின் தலைப்பு மற்றும் உபதலைப்புகள் தொடர்பாக உங்களுக்கு நீங்களே கேள்விகளை உருவாக்கிக்கொள்ள வேண்டும். இந்தக் கேள்விகள்தான் வாசிப்புக்கான தூண்டுகோல்கள்.


3. வாசித்தல்: இப்போது, உங்கள் மனதுக்குள் நீங்கள் உருவாக்கியுள்ள கேள்விகளுக்கு விடைதேடியவாறு புத்தகத்தை வாசியுங்கள். தன்னிச்சையான வாசிப்புக்கும், உங்கள் கேள்விக்கு விடைதேடி நீங்கள் வாசிப்பதற்கும் உள்ள வித்தியாசத்தை நீங்கள் உணர்வீர்கள். மிக முக்கியமான பகுதிகளை அடிக்கோடிடுவது அல்லது பக்கக்குறிப்பு எழுதிவைப்பது நல்லது.

4. நினைவுபடுத்திப் பார்த்தல்: வாசித்து முடித்து ஒரு மணிநேரத்தில் அனேக பகுதிகளை மறந்துவிடுவது மனித இயல்பு. அப்படி மறக்கத் தொடங்கும் நேரத்தில் படித்ததை நினைவுபடுத்தி மனதுக்குள் சொல்லிப் பார்ப்பதால் படித்தது மனதில் தங்கும்.


5. எழுதிவைத்தல்: புத்தகத்தில் இடம்பெற்றுள்ளவற்றில் நமக்கு அவசியமான தகவல்களையும் கருத்துக்களையும் டைரியிலோ, நோட்டுப் புத்தகத்திலோ எழுதிவைக்க வேண்டும். இதனை ஒரு பழக்கமாக்கிக்கொண்டால், இது பின்னாட்களில் ஒரு அறிவுப் புதையலாக மாறிவிடும். அவ்வப்போது வாழ்க்கையில் தேவைப்படும் போதெல்லாம், பதிவுசெய்துகொண்ட கருத்துக்களை நினைவுபடுத்தி நடைமுறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.


இந்த உத்தியைப் பயன்படுத்தி புத்தகங்களை வாசிக்கக் கற்றுக்கொண்டால், நமது வாசிப்புத் திறன் உயர்வதோடு மட்டுமன்றி, நாம் வாழ்க்கையில் உயர்வதும் நூறு சதம் சாத்தியமாகிவிடும்.


வாசிக்கும் நாடாகட்டும் இந்தியா!

அமெரிக்கர்களில் பலரும் பல துறைகளில் சாதனைமேல் சாதனை படைப்பவர்களாக இருப்பதற்கு முக்கியக் காரணங்களில் ஒன்று அங்கே விதைக்கப்பட்டிருக்கும் புத்தகம் படிக்கும் பழக்கம். அமெரிக்க இளைஞர்களிடம் இந்த ஆர்வத்தை தூண்டுவதில் அங்குள்ள அறிவுஜீவிகள் உணர்வுபூர்வமாகச் செயல்படுகிறார்கள். அமெரிக்காவையே புத்தகம் படிக்கும் நாடாக மாற்றும்வரை ஓயப்போவதில்லை என்று சபதம் எடுத்துச் செயல்படுகிறார் தொலைக்காட்சி டாக்ஷோக்களின் முன்னோடியான ஓப்ரா வின்ஃப்ரே. உலகின் அறிவுத் தலைநகரமாகப் போற்றப்படும் இந்திய நாட்டு இளைஞர்களிடமும் புத்தகம் படிக்கும் வேட்கை தூண்டப்பட்டால் வையத் தலைமைகொள்ளும் புதிய தலைமுறை இங்கே உருவாகிவிடும்.

வாசிப்போம்! சாதிப்போம்!


சுசி திருஞானம்
நிறுவனர் - தலைவர்
தமிழ்நாடு எடிட்டர்ஸ் கில்ட்
Tamil Nadu Editors Guild

No comments:

Post a Comment