ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், வாழ்க்கையைப் பற்றி ஓர் அருமையான கருத்தை வெளியிட்டார். “மனித வாழ்க்கையை நாம் இரண்டு விதமாக வாழலாம். இந்த உலகில் எதுவுமே சுவாரஸ்யமானதில்லை என்ற கண்ணோட்டத்துடன் வாழ்வது ஒருவகை. உலகில் நடப்பவை அனைத்துமே அற்புதமானவை என்ற கண்ணோட்டத்துடன் வாழ்வது மற்றொரு வகை”. நம்மில் பலர் நம்மைச்சுற்றி நடக்கும் அதிசயங்களை கவனிக்கத் தவறிவிடுகிறோம். இந்த அற்புதமான பூமிக் கோளத்தில் மனிதர்களாகப் பிறந்ததற்காகவே நாம் பெருமிதம் கொள்ள வேண்டும். நமக்கு நல்ல பெற்றோர், நல்ல ஆசிரியர்கள், நல்ல நண்பர்கள் கிடைத்திருப்பதை எண்ணி நாம் மகிழ்ச்சிகொள்ள வேண்டும். வாழ்க்கையில் உங்களுக்குக் கிடைத்துள்ள நன்மைகளுக்காக நீங்கள் நன்றி உணர்வுடன் நடந்துகொள்கிறீர்களா? உங்களுக்கு உதவுபவர்களுக்கு நீங்கள் நன்றி தெரிவிக்கிறீர்களா?
நன்றி பாராட்டும் பண்பாளர்களுக்கு மிகச்சிறந்த வாய்ப்புகளின் கதவுகள் திறந்துகொள்கின்றன. அவர்களுக்கு தடைக்கற்கள் படிக்கற்களாக மாறுகின்றன. அவமதிப்பு மரியாதையாக மாறுகிறது. பிரச்சினைகளே பரிசுகளாக மாறிவிடுகின்றன. தோல்வி வெற்றியாக மாறுகிறது. நான் எனது வாழ்க்கையில் நன்றிமறவாமல் செயல்படுவதற்கு நன்றிப் பட்டியல் என்ற உத்தியை பயன்படுத்துகிறேன். ஓவ்வொரு நாள் இரவிலும் தூங்கச்செல்லும் முன்பாக, எனக்கு நன்மை தந்த மனிதர்களையோ, சம்பவங்களையோ நன்றியுடன் நினைவுகூர்ந்து பட்டியலிடுகிறேன். அது, எனக்கு உத்வேகம் தந்த புத்தகமாக இருக்கலாம், எனது குடும்பத்தினரின் பாசமிகு உதவியாக இருக்கலாம், அல்லது நான் சந்தித்த ஓரு புதிய மனிதரின் புன்னகையாக இருக்கலாம்.
நன்றிப் பட்டியலின் கடைசி வரியாக, அன்றைய நாளில் எனக்கு மிக அதிக மகிழ்ச்சி தந்த தருணத்தை நினைவுபடுத்தி எழுதி வைக்கிறேன். இதனால் எனக்கு உண்மையிலே மகிழ்ச்சி தருவது எது என்பதை நான் அறியமுடிகிறது. இந்த நன்றிப் பட்டியல் உத்தியை நீங்களும் பின்பற்றலாம். நன்றி மனதில் இருந்தால் போதும் என்ற கண்ணோட்டம் தவறானது. படிப்பிலும் வாழ்க்கையிலும் நீங்கள் முன்னேற உதவுபவர்களுக்கு நீங்கள் வெளிப்படையாக நன்றி தெரிவியுங்கள். வார்த்தைகளில் நன்றி கூறலாம். நன்றியுடன் கைகுலுக்கலாம். நன்றிக் கடிதம் அனுப்பலாம். நன்றிபாராட்டும் நற்பண்பை வளர்த்துக்கொண்டால் சோதனையான நாட்கள்கூட மிகுந்த மகிழ்ச்சியான நாட்களாக மாறிவிடும்.
ரோமானிய தத்துவமேதை சிசரோவின் வரிகளை உங்களுக்கு நினைவுபடுத்துகிறேன். “நன்றிபாராட்டுவது மிகச்சிறந்த பண்பு மட்டுமல்ல, அதுவே மற்ற அனைத்து நற்பண்புகளுக்கும் தாய்”
சுசி திருஞானம்
நிறுவனர் - தலைவர்
தமிழ்நாடு எடிட்டர்ஸ் கில்ட்
Tamil Nadu Editors Guild
No comments:
Post a Comment